அழகியல்….!!

ஹாய் மக்களே..

எப்பவோ எழுதினது.. அதை தூசு தட்டி சுருக்கி சின்னதா எழுதி இங்க போட்டேன். அதைப் படித்தவர்கள் தந்த ஊக்கமும் உற்சாகமும் “ராணி முத்துக்கு” அதை அனுப்ப என்னை ஊக்கியது. முதன் முதலாக ராணி முத்து இதழுக்கு பொறுப்பான அண்ணாவோடு கதைத்தபோது அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தையே “நீங்கள் கதைப்பது, உங்களின் தமிழ் காதில் தேன் போல் வந்து பாயுது” என்று. மிகவுமே சந்தோசமா இருந்தது. நான் அனுப்பியதும் படித்துவிட்டு உடனேயே போடுவதாக சொல்லி இன்று அச்சிலும் ஏற்றி தந்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இங்கே பதிந்தபோது, அதை படித்துவிட்டு ராணிக்கு அனுப்புங்க நிதா என்று சொன்ன மதுவுக்கும் (தமிழ்மதுரா), அக்கா இத ராணிக்கு அனுப்ப சொல்றாங்க.. என்ன செய்ய என்று கேட்டபோது, மிகவும் அழகா வந்திருக்கு நிதா. அனுப்பும் என்று சொன்ன ரோசி அக்காவுக்கும், நம்பர் கேட்டதும் தந்தது மட்டுமல்லாமல் ஷெண்பாவோட பிரெண்ட் என்று சொல்லுங்க நிதா என்று சொன்ன ஷெண்பாவுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒழுங்காக அத்தியாயங்கள் பதியாத போதிலும், என் கதைகளை படித்து என்னை உற்சாகமூட்டி பாராட்டி மென்மேலும் எழுத தூண்டும் என் அன்பிற்கினிய வாசக வாசகியருக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பான நன்றிகள் பல. நீங்கள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமே அல்ல. நன்றி உறவுகளே!!

இதோ… “உனக்கொன்று சொல்லவேண்டும்..!” என்கிற பெயரில் நான் எழுதியது “அழகியல்” என்கிற பெயரில் மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு அச்சில் ஏறியிருக்கிறது.

யாராவது இந்த இதழை வாங்கி படித்தால் ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி விடுங்க. மீண்டும் நன்றி ராணி முத்துவுக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும்!!

 

No automatic alt text available.

Image may contain: 1 person

 

Image may contain: 1 person

உனக்கொன்று சொல்ல வேண்டும்!!

 

உன்னை முன்பின் நான் பார்த்ததில்லை. செவி வழியும் கேள்விப் பட்டதில்லை. ஐரோப்பா கண்டத்தில் நீ. ஆசியா கண்டத்தில் நான். பார் நம் எண்ணங்களை போலவே எத்தனை தூரமிருந்திருக்கிறது நமக்குள் என்று!  என் பதினெட்டாவது பருவத்தில், ரமணிச்சந்திரனின் நாயகர்களின் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் நான். உயரமாய் அழுத்தமாய் ஒருவன் வருவான். என் மனதை சொல்லாமல் கொள்ளாமல் கொள்ளை கொள்வான். உயிராய் அவனை நானும் நேசிப்பேன். போராடி கைபிடிப்போம். பின்னே சொந்தங்கள் சேரும்.. இப்படித்தான் என் கனவுகள் இருந்தது. கேட்கவே கேவலமாக இருக்கிறதல்லவா? என்ன செய்ய? அன்று என் அறிவும் புத்தியும் அவ்வளவுதானே! அதற்காக இன்றும் நீ என்னை அப்படி நினைப்பாயாக இருந்தால் நீதான் மிகப்பெரிய ஏமாளி!

அந்த நாட்களில்தான், ஒரு புகைப்படத்தின் வாயிலாக என் முன்னே வந்து நின்றாய் நீ. எனக்கு பிடிக்கவே இல்லை உன்னை. இவன் பெண் கேட்டு வீட்டுக்கு வந்தால் விரட்டி அடிப்பேன் என்று அம்மாவிடமே சீறிவிட்டு உன்னை தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டேன். அவ்வளவு கோபம் உன்மேல். பின்னே, படித்து எஞ்சினியரிங் முடித்து என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நானே ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்கிற என் கனவை குலைக்கவென்றே வந்த மகா பாதகனாகத்தான் நீ தெரிந்தாய்.

அதன் பிறகு வந்த நாட்களெல்லாம் நரகமாக போயிற்று! அதுநாள் வரை என்னை கடிந்தொரு வார்த்தை பேசியிராத அப்பாவைக்கூட கடிந்து பேச வைத்தவன் நீ. தினமும் ஏதாவது ஒன்றுக்காய் அம்மாவிடம் அடி வாங்கினாலும் இரவில் அவரின் அணைப்பில்லாமல் நான் உறங்கியதே இல்லை. அப்படியான அம்மாவை முகம் திருப்ப வைத்தவன் நீ. உன் மீதான வெறுப்பின் அளவும் ஆவேசமும் மகா வேகமாக பெருகிக்கொண்டிருந்தது எனக்குள். சத்தியமாக சொல்கிறேன், அன்றைய நாட்களில் என் முன்னால் நீ வந்திருப்பாயாக இருந்தால் நீயே என்னை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு உன்னை கொணர்ந்திருப்பேன். அப்படி நீ வராமல் இருந்ததற்காய் இன்று உனக்கு நன்றி சொல்லச் சொல்கிறது என் இதயம். ஆனால், சொல்லமாட்டேன். அதென்ன உனக்கு நான் நன்றி சொல்வது?

பிடிக்காமலேயே சம்மதித்தேன். வேறு வழிகள் இல்லை. மரணத்தை தேடுமளவுக்கு நான் கோழையும் அல்ல! என்னதான் கோபக்காரியாக இருந்தாலும், பெற்றவர்களை மீறும் அளவுக்கு தைரியசாலியும் அல்ல! சம்மதித்துவிட்டு எத்தனையோ நாட்கள் உன்னை திட்டித் தீர்த்திருக்கிறேன். நீ நாசமாக போகவேண்டும் என்று சபித்திருக்கிறேன். நாட்கள் பறந்தது. நீ என்னோடு கதைத்துவிட போராட, நானோ உன்னோடு கதைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தேன். ஒருநாள் எதிர்பாராமல் உன் குரல் என் செவிகளை மோதியது. அன்றே உன்னிடம் நான் விழுந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? கிடையாது!

ஆனால், உன் அடாவடித்தனத்தை உள்ளுக்குள் ரசித்தேன். ஊரையே மிரட்டும் என்னையே மிரட்டி என்னிடமிருந்தே என் டெலிபோன் இலக்கத்தை பெற்றுக்கொண்ட உன் கெட்டித்தனம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு ஒரு மூன்று மாதங்கள்.. அந்த மூன்று மாதங்களில் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு தடவைகள் நாம் கதைத்திருப்போமா?? அத்தனை தடவைகளும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வருமா நாம் பேசிக்கொண்ட நேரத்துளிகள்? உன்னை நீ எனக்கு புரிய வைத்துவிடவும், என்னை நீ புரிந்துகொள்ளவும் முயற்சித்த நேரங்கள். அதை செய்துவிடக்கூடாது என்று நான் பிடிவாதமாக இருந்த நேரத்துளிகளும் அவைதான். ஆனாலும், இன்று என் நினைவலைகளில் பசுமையாக நிலைத்துவிட்ட நாட்களவை. அப்போதெல்லாம் என்ன கதைத்தோம்? எனக்கு தெரியாது. உன்னை பிடித்து கதைத்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால், இனி நீதான் என் வாழ்க்கை துணை என்று நானே எனக்குள் திணித்துக்கொண்டு கதைத்தேன்.

அதனாலோ என்னவோ அப்போதெல்லாம் உன்னிடம் கதைக்கவும் பகிரவும் என்னிடம் எதுவும் இருக்கவில்லை. ம்.. ஓ.. பிறகு? இல்ல.. இவைதான் பெரும்பாலும் நான் பேசிய வார்த்தைகளாம் என்று இதையும் நீதான்

பின்நாட்களில் சொல்லியிருக்கிறாய், அப்போதெல்லாம் நீ நினைத்துக்கொள்வாயாம் இது ஒரு வாயில்லா பூச்சி. அப்பாவி, பாவம் என்று. இன்றோ, நீ கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் உனக்கு வழங்குவதே இல்லை, எமாந்துபோனேனே என்று நீ சொல்வதை கேட்கையில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். இதோ.. இப்போதுகூட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது, இது நீயாக ஒற்றைக்காலில் நின்று தேடிக்கொண்ட வாழ்க்கை. இந்த ஜென்மம் மட்டுமல்ல அடுத்து வரும் அத்தனை ஜென்மங்களிலும் உனக்கு நான்தான். நான் மட்டும் தான். நான் இறந்தால் கூட இன்னொரு துணையை நீ தேடக்கூடாது. ஆவியாக வந்து உன்னை கொன்றுவிடுவேன். புரிந்ததா?

இரண்டாவது தடவையாக நீ என்னோடு கதைத்தபோது சொன்னாய், என்று என்னோடு முதன் முதலாக நீ கதைத்தாயோ அன்றிலிருந்து நீ என்னவள். உன் செலவுகள் அத்தனைக்கும் பொறுப்பானவன் நான் என்று. திருமணமாகி பிள்ளை பெற்ற பிறகும் மாமனார் வீட்டிலிருந்து சீர் எதிர்பார்க்கும் காலத்தில்.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மவுசு அதிகமான நேரத்தில் நீ அப்படி சொன்னதும், சொன்னதோடல்லாமல் செயலில் காட்டியதும்.. அன்றுதான் என் மனதில் முதன் முதலாக உன்னைப்பற்றி நல்லதாக ஒரு வித்து விழுந்தது.

என் அக்கா வீட்டுச் சுவரில் பல போட்டோக்களில் ஒரு போட்டோவாக நின்ற என்னில் நீ விழுந்தாயாம். நீதான் சொன்னாய். இன்றுவரை அந்த போட்டோவை நானும் உற்று உற்று பாக்கிறேன், அப்படி இப்படி என்று திருப்பியும் பார்க்கிறேன். நீ விழும் அளவில் அதில் ஏதாவது தெரிகிறதா என்று. ம்க்கும்! ஒரு கண்றாவியும் தெரியவில்லை. மிக கோமாளியாக மட்டுமே தெரிகிறேன். உண்மையை சொல்லப்போனால் அந்த போட்டோவை யார் எப்போது எடுத்தார்கள் என்றுகூட இன்றுவரை எனக்கு தெரியாது. தெரிந்திருக்க, முகம் கழுவி தலை வாரி கொஞ்சம் மேக்கப் போட்டு நானும் அழகிதான் என்று போஸ் கொடுத்திருப்பேன்.

அந்த போட்டோவில் எனக்கே நான் லூசாகத்தான் தெரிகிறேன். பிறகெப்படி உனக்கு மட்டும் அழகியாக தெரிந்தேன்? ஹாஹா.. காதலுக்கு கண்ணில்லையாம். பார்த்தாயா உன் வாழ்விலும் விதி விளையாடிவிட்டது.

தமிழ்நாட்டின் மீனம்பாக்கம் விமானநிலையம். நாம் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டது அங்கேதான் இல்லையா.. அதனால் நம் காதலின் நினைவுச் சின்னம் என்று அதை சொல்வோமா? ஊரே கைகொட்டிச் சிரிக்கும்! சிரித்தால் சிரிக்கட்டும்! ஊருக்கு வேற வேலை ஏது? ஆனால்.. அதுவரை நாம் காதலித்தோமா என்ன? என்னளவில் இல்லை! ஒருநாள் காலையில் வந்திறங்கிய நீ சிரிப்பை உனக்குள் மென்றபடி என்னை பார்த்தது.. இன்றும் என்னால் மறக்கமுடியாது. அந்த நொடியிலிருந்து உன்னை எனக்கும் கொஞ்சம் கூடவே பிடிக்கத் தொடங்கியது. நீயும் கொஞ்சமே கொஞ்சம் ரமணிச்சந்திரனின் நாயகன் போலிருந்தாய். அல்லது உன்னை எனக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டதால் அப்படி தெரிந்தாயோ என்னவோ.. அப்படித்தான் நினைக்கிறேன். மற்றும்படி நீ ஒன்றும் பெரிய அழகனில்லை.

அடுத்தநாளே நம் திருமணம். முதல் நாள் காலையில் முதன் முதலாக பார்த்து அடுத்தநாள் காலையில் திருமணம் செய்தவர்கள் நாமாக மட்டும்தான் இருப்போம்.

மின்னலாக மறைந்துபோன மூன்று வாரங்கள்.. தொலைபேசி வழியாக நான் அறிந்துகொண்ட நீயும் நிஜ நீயும் வேறு வேறல்ல என்று நானும், தொலைபேசி வழி நீ அறிந்துகொண்ட எனக்கும் நிஜ எனக்கும் ஆறு அல்ல ஆறாயிரம் வித்தியாசங்கள் என்று நீயும்  அறிந்துகொண்ட நாட்கள் அவை.

திரும்பவும் அதே மீனம்பாக்கம் விமானநிலையம். எனக்கும் உனக்குமான முதல் பிரிவை உண்டாக்கிய மிக பொல்லாத இடம்! அன்று.. ஏன் அழுகிறேன் என்று தெரியாமலே நான் வடித்த கண்ணீர்.. எனக்கே தெரியாமல் எனக்குள் நீ மிக ஆழமாக புகுந்துவிட்டாய் என்பதை எனக்குணர்த்திய கண்ணீர்!

மறுபடியும் தொலைபேசி வாழ்க்கை.. நீ ஐரோப்பா கண்டத்திலும் நான் ஆசியா கண்டத்திலும். கட்டிய மனைவியிடம் ஒருமாதம் கழித்து தொலைபேசியில் என்னை பிடித்திருக்கிறதா என்று கேட்ட வீரன் நீ. நேரில் கேட்டு நான் இல்லை என்று சொல்லிவிட்டால் நான் என்ன செய்வது என்று நீ கேட்டதுகூட எனக்கு மிக பிடித்திருந்தது. அந்த பயம் இருக்கட்டும்!

அன்று விமான நிலையத்தில் வைத்து நான் வடித்த கண்ணீர் உனக்கு உணர்த்தவில்லையா உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று. நிச்சயம் உணர்த்தியிருக்கும். நீயா உணராமல் இருப்பாய்? என்னைப்பற்றி எனக்கு தெரியாதவற்றைக் கூட அறிந்து வைத்திருக்கிறவன் நீ! ஆனாலும் என் வாயால் கேட்டுவிடும் ஆசை!

என் வாயால் கேட்டுவிட வேண்டும் என்கிற உன் வீம்பு, நான் அதை சொல்லிவிட கூடாது என்கிற என் வீம்பை நன்றாகவே வளர்த்துவிட்டது. இன்றுவரை நீயும் கேட்கிறாய் நானும் சொல்லாமல் மறுக்கிறேன். அது கூட எனக்கு மிக பிடித்துத்தான் இருக்கிறது.

இதோ.. கண்மூடி திறக்கமுதல் எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டது. இன்றுவரை நான் நானாக இருக்கிறேன். என்னை நீ நானாகவே இருக்க விட்டிருக்கிறாய். உனக்கு தெரியவில்லை. அது உனக்கு நீயே வைத்துக்கொள்ளும் ஆப்பு என்று. ஆனால், என்ன செய்வது? உன் தலைவிதி அப்படியாகிவிட்டதே!

கருத்தொருமித்த காதல் வாழ்க்கை சத்தியமாக எனக்கு வேண்டாம். அது சுத்த போர்! சண்டையும் சமாதானமும்தான் இல்லறத்தின் அழகியலே! இப்படியே நாம் எப்போதும்போல சண்டை பிடிக்க வேண்டும். பிடிவாதமும் பிழையும் என் பக்கமே இருக்கவேண்டும். உன் பக்கம் இருக்கும் நிலையை நீ என்றுமே வரவிட்டதில்லை. அது தெரியும் எனக்கு. ஆனாலும், நீதான் என்னை சமாதானமும் செய்ய வேண்டும். இந்த வாழ்க்கைதான் எனக்கு பிடித்திருக்கிறது. சாகும்வரை!

சாகும் அந்த நிமிடத்தில் கூட உன் நெற்றியில் சின்னதாய் ஒரு முத்தம் பதித்து உன்மடி நான் சாயவேண்டும். அப்போதும் என்னை பிடித்திருக்கிறதா என்று நீ கேட்கவேண்டும். காதோரங்களை நனைக்கும் என் கண்ணீர் துளிகள் தான் அப்போதும் என் பிடிப்பை உனக்கு சொல்லும்!

இதை யார் யாரெல்லாமோ படிப்பார்கள். ஆனால் நீ படிக்கமாட்டாய். அந்த தைரியத்தில் சொல்கிறேன், உன்னை எனக்கு மிக மிக பிடிக்கும்!!!

உயிரோடு உறைந்தாயோ..!!-கவிதா

 

 

திருச்சியின் சிறப்போடு ஆரம்பிக்கும் கதை நாயகன் சித்தார்த்தின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. அவன் மனதில் இடம் பிடித்தவள் காமாட்சி. அவள் ஏனோ அவனை பிரிந்து வாழ்கிறாள்.

அப்படியே நம் நாயகி சிற்பிகாவின் அறிமுகமும், அவள் மனதை கவர்ந்த இமயனும் என்று கதை பயணிக்கிறது. இரண்டு நாயகன் இரண்டு நாயகி என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கதை பயணிக்கையில், பாத்திரங்களின் பெயரை வைத்தே விளையாடியிருப்பார் என் அன்பிற்கினிய கவி! இந்தக் கதையின் நாயகர்கள் நாயகிகள் எத்தனை என்பதை படிக்காதவர்கள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கதையை பற்றி சொல்வதை விட, அந்தக் கதையில் ஆங்காங்கே வந்த கவிதைகள் எல்லாமே வெகு அழகு. அந்த சூழ்நிலையை அவரவர் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. அதோடு, கதை வாழ்ந்த நகரம், ஒவ்வொரு நிகழ்வுகளையும் அதற்கான உண்மையான விளக்கங்களோடு விவரித்தது எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது கவி.

ஆரம்பத்திலிருந்து கதையின் முக்கால் பகுதி வரைக்கும் ஒருவித சஸ்பென்ஸ் கூட வந்துகொண்டே இருந்தது. அழகான பெயர் தெரிவுகள்.. ஒரு தாயால் இப்படி நடக்க முடியுமா? மகன் வளர்ப்பு மகன் என்றாலும் இப்படியும் பெற்றவர் இருக்க முடியுமா? இப்படி பல கேள்விகள் நமக்குள் தன் பாட்டுக்கு எழுகிறது. என்ன ஒரு வேதனை என்றால், அப்படி இல்லவே இல்லை என்று சொல்லமுடியா நிலையில் நாம் இருப்பதுதான்!

இமயனை அவன் அப்பாதான் கொன்றார் என்று எல்லா ஆதாராங்களுடனும் முடிவாக, புதிதாக ஒருவர் வருகிறார். அவருக்கும் இமயனுக்கும் என்ன தொடர்பு. அப்போ இமயனை கொன்றது யார்?

இமயன் இறந்துவிட்டான் என்றால் சிற்பிகா?

சித்தார்த்தின் காமாட்சி யார்?

சிற்பியின் காதல் ஓரழகு என்றால் சித்தார்த்தின் நேசம் பேரழகு!

இருவரும் தங்கள் இணைகளுடன் இணைந்தார்களா என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

அழகான காதலோடு த்ரிள்ளரையும் சேர்த்து நேர்த்தியாக வந்திருக்கிறது கதை!

முதல் கதைக்கும் இந்தக் கதைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கவி! நல்ல முன்னேற்றம் அழகான வார்த்தை பிரயோகங்கள். ஒவ்வொருவரின் மனதையும் தொடும் விதமான வசனங்கள் என்று எனக்கு இந்தக் கதை மிக மிக பிடித்திருக்கு!!

மென்மேலும் அழகான கதைகளை படைத்து, எழுத்துலகில் சிறப்புற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

மலராதோ உந்தன் இதயம்..!- ரோசி

 

கார்த்திகேயனும் நித்யாவும் பெற்றவர்களை சமீபத்தில் இழந்த அன்பான சகோதரர்கள். சிற்றன்னையின் ஏவளின் பெயரில், ஒரு பெண்ணை பார்க்கச் செல்கிறார்கள். அவள் மதுரா!

இந்தக் கதையின் நாயகி. எனக்கு என்னவோ கதையின் நாயகியாக மட்டுமே அவளை பார்க்க இயலவில்லை. பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு, முன்பின் அறிமுகம் அற்று, ஒருநாள் இலங்கை வரும் அந்த ஆண்மகனை முழுமையாக நம்பி கழுத்தை நீட்டும் பல பெண்களின் பிரதிநிதியாகவே அவள் தெரிந்தாள்.

கடவுளின் அருளால் பலரின் வாழ்க்கை வளமாக அமைந்தாலும், இந்த மதுராவை போன்றே வெளிநாடுகளில் பாதிக்கப்படும் பெண்களும் சற்றே அதிகளவில் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை!

மதுரா, துணிந்து கட்டியவனை சட்ட ரீதியாக விலத்தினாள். அப்படி எத்தனை பெண்கள் துணிகிறார்கள் என்றால், அது கேள்விக்குறி தான். அதன் பிறகான வாழ்க்கை ஒன்று இருக்கு, அதற்கிடையில் அவன் மூலம் உருவாகிவிட்ட வாரிசுகளின் நிலை, ஏன்.. ஊரில் மகளை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்திருக்கிறோம், அவள் நன்றாக வாழ்கிறாள் என்று மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் உறவுகளின் நிலை என்று பலது மனதை தாக்குகையில் ‘என் தலைவிதி இதுதான்..’ என்று கசப்பை விழுங்கிக்கொண்டு வாழ்க்கையை தள்ளும் பரிதாபத்துக்கு உரியது அந்தப் பெண்களின் நிலை.

ஆனால், இந்தக் கதையின் நாயகி மதுராவோ துணிந்து செயல்படுகிறாள். ஆனாலும், மனதளவில் அவள் அடைந்த காயமோ மிகமிக ஆழமானது. ஒரு பெண், கணவன் என்று வருகிறவனிடம், தன்னை, தன் எதிர்காலத்தை, தன் சந்தோசத்தை, கனவுகளை, எதிர்பார்ப்புக்களை என்று அத்தனையையுமே அவனிடம் ஒப்படைக்கிறாளே.. அதன் காரணம் என்ன? நம்பிக்கை! அவன் என்னையும் என் விருப்பு வெறுப்புக்களை மதித்து, என்னை போற்றி பாதுகாப்பான் என்கிற மலையளவு நம்பிக்கை.

வெளிநாட்டவர்களால் விளங்கிய கொள்ள முடியாத பெரும் புதிர் அல்லவா, நம்மவர்களின் அந்த நம்பிக்கையும் அதன் மேலான நம் திருமண வாழ்வும். வெளிநாட்டவர் யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், இவரை நான் முன்ன பின்ன பார்த்தது இல்லை, பெற்றவர்கள் நிச்சயித்தார்கள் நான் கட்டிக்கொண்டேன் என்று. அது எப்படி சாத்தியம் என்று தலையை பிய்த்துக்கொள்வார்கள். அப்படி அற்புதமான இல்லற வாழ்வு மதுராவில் வாழ்வில் நொடித்துப் போகிறது. அவளும், நொடிந்து, உயிர்ப்பற்று, தான் சுமக்கும் குழந்தைகளின் மீது பற்றுமற்று என்று உயிர்க்கூட்டை உடலில் சுமப்பவளை மனதில் சுமக்கிறான் கார்த்திகேயன்.

எப்போதுமே ரோஸி அக்காவின் நாயகிகளை விட நாயகர்களை எனக்கு மிகவுமே பிடிக்கும். அப்படித்தான் இந்த கார்த்தியும். அவனிடம் இருக்கும் பொறுமை, அவனது பண்பான நடத்தை, பாசமான செயல்கள் என்று அத்தனையும் அழகிலும் அழகு.

இந்தக் கதையில் பல இடங்கள் நான் ரசித்து ருசித்தவை. மதுராவுக்கு செக்கப்புக்கு கூட்டிப்போன இடத்தில் இன்னொரு தம்பதியினரோடு உரையாடுகையில், தன் மனதை தானே உணர்ந்துகொள்ளும் கார்த்திகேயன்.. நான் அவளின் கணவன் அல்ல என்று சொல்லாமல் உரையாடும் அவனின் கெட்டித்தனம், மதுராவின் கருவை பற்றி விசாரிக்கையில் அவனுக்குள் உண்டாகும் பரபரப்பு.. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் அமர்ந்திருந்த விதம்…ஹாஹா.. அத்தனை அழகு! அருகில் அவள் பார்வையால் பொசுக்குகிறாள், இவனோ எதிரில் இருப்பவர்களோடு குதூகலமாக உரையாடுகிறான். உள்ளே கிலி.. ஹாஹா.. அவனின் தவிப்பை ரசித்துச் சிரித்தேன்.

ஸ்கான் செய்கையில் குழந்தைகளை கண்டுவிட அவன் கொண்ட ஆர்வம் மிக மிக அழகு!

வயிற்று வலி வந்த அந்த நிமிடம் அவள் பட்ட வேதனை.. உடல் வலியை தாண்டி மன வலி இருக்கிறதே.. அப்பப்பா.. அருமை! ஒரு அந்நியனிடம் தன் நிலையை சொல்லமுடியாமல் மதுரா பட்ட பாடு.. கண்கள் கலங்கிவிட்டது எனக்கு.. அவ்வளவு தத்ரூபம்!

பிள்ளை பெற்றுக்கொள்ள செல்லும் அந்த நேரத்தில் மதுரவின் பயமும் துடிப்பும் அருமை என்றால், மணமாகாமல் கண்ணால் காணாத குழந்தைகள் மீதும், அவர்களை சுமப்பவள் மீதும் கார்த்திகேயன் கொண்ட நேசமும், அந்தக் கணத்தில் அவன் தவித்த தவிப்பும்.. வார்த்தைகள் இல்லை வடிக்க.

என்னதான் இன்னொரு வாழ்க்கை பற்றிய எண்ணம் மதுராவில் மனதில் இல்லாதபோதும், அவள் மனதிலும் அவன் இருக்கிறான் என்பதை அவள் அறியாத போதும் அவன் அறிந்துகொண்ட தருணம் அது.

அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடயமும் அழகோ அழகு.. குழந்தைகளின் பிறப்பு, அதற்கு கார்த்திகேயனின் பிரதிபலிப்பு, அதை பார்த்து நொறுங்கிப்போகும் மதுரா என்று.. ஒவ்வொருவரின் உணர்வையும் அப்படியே அள்ளித் தெளித்திருக்கிறார் ரோஸி அக்கா.

முன்னாள் கணவன் இறந்ததும் மதுராவின் நிலை.. அவன் வேண்டுமானால் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால், கணவன் என்று நெஞ்சில் வரித்து அவனோடு உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணை அது நிச்சயம் பாதிக்கும் இல்லையா. அந்த இடத்தில் மதுராவில் பிரதிபலிப்பு.. நிஜம்!

இப்படி பல இடங்கள் நான் ரசித்தவையும் ருசித்தவையும்.

எப்படியும் மதுரா கார்த்திகேயனின் அன்பை புரிந்துகொள்வாள் என்று அவனைப்போலவே நானும் நம்பிக்கையோடு காத்திருக்க, அவள் அவனுக்கு கொடுத்த அதிர்ச்சி நானுமே எதிர்பாராதது.

கடைசியில் இருவரும் எப்படி இணைந்து கொள்கிறார்கள் என்பதை கதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். ரோஸி அக்காவின் கதையில் பல இடங்களில் பல வார்த்தைகள் மனதை நச் என்று தொட்டுச் செல்கிறது. அப்படி எனக்கு மிக மிக பிடித்த ஒன்று; “தன்னந் தனிமை நம்மில் மோதி அதிரவைக்கையில், அதன் சவால்களை எதிர்கொள்ள கண்ணீரே தடை என்பதை புரிந்துகொள்ளும் நம் மனம், அதை தூர ஒதுக்கி விடுவதையும், அதுவே, தாங்கிக்கொள்ள துணையுண்டு என்று கண்டால் எதற்கெடுத்தாலும் கண்ணீரின் துணையை நாடுவதையும் சிந்திக்க மறந்துவிடுகிறோம்”

எவ்வளவு உண்மை!

கதையும் மிக மிக அருமை!!

அழகான நீரோட்டம் ஒன்றை கண்ணாரக் கண்டு மனதார ரசித்த உணர்வு!!

நன்றி அக்கா, அருமையான கதை ஒன்றை எங்களுக்கு தந்ததற்கு!!

அலைபாயும் நெஞ்சங்கள்..! – சுதாரவி

 

திருமணம் என்பது ஆண்களுக்கு எப்படியோ.. பெண்களுக்கோ அது மிகப்பெரிய எதிர்பார்ப்பு! அவர்களின் எதிர்காலம்.. அவர்களின் சந்தோசம்.. அவர்களின் வாழ்க்கை.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படித்தான் இங்கே ஸ்ருதியும்! கனவுகளோடு கைப்பிடித்தவனை எல்லாமுமாக அவள் நம்ப அவனோ திரும்பியும் பார்க்காமல் புறக்கணிக்கிறான். புறக்கணிப்பின் வலி மிக பெரியது. ஆனாலும், அதை தாங்கிக்கொண்டு அவனோடு சுமூகமாகிவிட போராடும் பெண்ணாக மனதில் நிற்கிறாள் சுருதி!

அந்தப் போராட்டம் ஒன்றும் இலகுவானதல்ல! அங்கே சுயமரியாதை கேள்விக்குறியாகும். அவனும் நானும் ஒன்று. அவனில்லாமல் நானில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே சுயமரியாதையை அடக்கிவிட்டு அதை செய்ய இயலும்!

ஆறுமாத காலம்… திரும்பியும் பாராமல் வதைக்கிறான் நிகில். அவன் அப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்று அறியாத போதே, எதுவாக இருந்தாலும் மனைவியாக வந்தவளை புறக்கணிக்கும் அவன் மீது கோபம் தான் வருகிறது. அப்படி கோபத்தை வர வைப்பது எழுத்தாளரின் வெற்றியல்லவா!

ஆண் என்கிறவன் ஒரு பெண்ணை அவள் யாராக இருந்தாலும் வதைக்க உடனேயே கையிலெடுக்கும் ஆயுதம் அவளின் ஒழுக்கம். இங்கேயும் அப்படித்தான்.

நான் நினைப்பதுண்டு.. இனி வரும் காலங்களில் ஆணின் அந்த புத்திசாலித்தனமான ஆயுதத்துக்கு நாம் நம்மை பலியாக்கக் கூடாது என்று! எனக்கு என் மனச்சாட்சி தான் நீதிபதி! அது சொன்னால் போதும் நீ எப்படியானவள் என்று!

நிகிலுக்கு நடந்ததை அறிந்த பிறகும் அவன்மேலிருந்த கோபம் என்னை விட்டு போகவில்லை. அவன் வாழ்வில் நடந்தது நம்பவே முடியாத அதிர்ச்சி! அவனது காயம் இலகுவாக ஆறிவிடக் கூடியதுமல்ல! ஆனாலும், அவனது இறந்தகாலத்துக்கும் ஸ்ருதிக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தமே இல்லாத அவள் எதற்காக வதைக்கப்பட வேண்டும்? தாயின் கட்டாயத்தில் மணம் முடித்தது அவன் செய்த தப்பு! அதற்கு அவளுக்கு தண்டனையா..

நிகிலின் அன்னை.. ஹாஹா என்ன சொல்லட்டும்.. இப்படியான மாமியார்கள் கிடைப்பது என்பது சாத்தியமல்ல.. கிடைத்துவிட்டால் ஒவ்வொரு பெண்ணுக்குமே அது வரம் தான். மகனாக இருந்தாலும் அவன் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டும் மனம் இலகுவில் வந்துவிடாதே! மனதில் நிற்கிறார் அவர்!

மயக்கம்போடும் அவர் ஐந்து நட்சத்திர அறையில் ரூம் கேட்பது.. ஹாஹா.. எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு நம்மையும் ரசிக்க வைக்கிறது!

இந்தக் கதையிலே நச் என்று எனக்கு மிகவுமே பிடித்த பாத்திரம் சரண்யா… மதிக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே இருப்பவள், கணவனிடம் பிடிபட்டதும் கேட்பாள் ஒரு கேள்வி..

இப்படி எத்தனை நாட்கள் அந்த நண்பனை பார்க்க போனேன்.. இந்த நண்பனை பார்க்க போனேன் என்று என்னை காக்க வச்சு இருப்பீங்க என்று.. உண்மை தானே.. மனைவி தானே.. என்று அவர்கள் அறியாமலே கணவர்கள் செய்யும் அலட்சியத்தை மிக இலகுவாக சுட்டிக்காட்டியிருப்பார் சுதாக்கா.

பல இடங்கள் மனதை தைத்துச் செல்கிறது.

ஆக, மொத்தத்தில் மிக அழுத்தமான கருவை மிக இலகுவாக தன் பாணியில் நகைச்சுவையை கலந்து நமக்கு தந்திருக்கிறார் எழுத்தாளர் சுதாரவி அவர்கள்!

மென்மேலும் எழுத்துலகில் மிக அழகான படைப்புக்களை தந்து புகழ்பெற என் உள்ளம் நிறைந்த அன்பான வாழ்த்துக்கள் அக்கா!!

நெஞ்சே… நீ வாழ்க!!

நெஞ்சே… நீ வாழ்க!

“இந்த பெட்டிய நான்தான் கொண்டு போவன்..”

“இல்ல நான்தான்!”

“அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்கு சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். பிறகென்ன?

அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து ஒன்பது வருடங்களாகியிருந்தது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? எல்லோரும் எப்படி இருப்பார்கள்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள்? என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார்.. கத்தாதீங்கோ..” என்ற மனைவியின் குரல் அதை தடுத்து நிறுத்தியது.

உஷா. அவனுடைய அன்புக்கினிய துணைவி. அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல!

இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே சென்றான். ஹாலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது.

தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு அவனிடம் வந்தனர். அவர்களை அவன் சமாளித்துக்கொண்டு இருக்கையிலேயே, “அப்பா.. எங்கட அம்மாவுக்கு என்ர இந்த பழைய ஃபோனைக் கொண்டக் குடுக்கட்டா? வீட்டுல சும்மாதானே இருக்கு..” என்றபடி வந்தாள் உஷா.

அவன் சம்மதிக்க, சந்தோசத்தோடு எடுத்து வைத்தாள்.

“நகையெல்லாம் எல்லாருக்கும் எடுத்து வச்சாச்சா?” நினைவு வந்தவனாக கேட்டான்.

“லாக்கர்ல இருந்து எடுத்துக்கொண்டு வந்திட்டன். ஆனா, ஊருக்கு கொண்டு போகவேணுமே? களவு கிளவு போய்ட்டுது எண்டா.. அதுதான் யோசிக்கிறன்.” என்றாள் உஷா.

“அப்படி எல்லாம் நடக்காது. அப்படியே களவு போனாலும் வேற வாங்கலாம். ஆனா, அங்க ஊருல எல்லாரும் என்ர மனுசி பிள்ளைகளை பார்த்து மூக்கில விரலை வைக்கோணும். அப்படி இருக்கோணும் நீங்க மூண்டுபேரும்.” என்றான் ஒரு வேகத்தோடு.

கணவனை புதிராகப் பார்த்தாள் உஷா. அவனோ மீண்டும் குழந்தைகளோடு ஐக்கியமாகி இருந்தான். அன்பான கணவன். அவளுக்கு குறை என்று இதுவரை எதுவுமே இல்லை. அவன் காட்டும் அன்பிலாகட்டும், அக்கறையிலாகட்டும், காதலிலாகட்டும்.

அவர்களின் பாதுகாப்பை யோசிக்காமல் பகட்டை விரும்புகிறவனும் அல்ல. பின்னே..

எல்லோரும் முதன் முதலாக ஊருக்கு போவதால் மனைவி பிள்ளைகளை தான் நல்லபடியாக வாழ வைப்பதை காட்ட விரும்புகிறான் போலும். அதிலே தப்பில்லையே. அவன் அப்படித்தானே அவர்களை வைத்திருக்கிறான்.

மனம் நிறைய, அவன் சொன்னபடியே அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவளுக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் என்று எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோசம்.

உற்சாகத்தோடு தயாராகினர். நிர்மலனுக்கும் மனதில் துள்ளல் தான். கூடவே ஒரு வேகமும்!

‘பார்! நல்லா பார்! நான் வாழும் வாழ்க்கையை பார். என் மனைவி பிள்ளைகளை பார். என் சந்தோசமான வாழ்க்கையை பார்’ என்று காட்டிவிடும் உத்வேகம்!

ஒருவழியாக கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் சென்றிறங்கி பெற்றவர்களை கண்டதும் ஆளாளுக்கு கட்டியணைத்து கண்ணீர் விட்டு சந்தோசத்தை பரிமாறிக்கொண்டனர்.

ஒருவரில் தெரிந்த மாற்றங்களை மற்றவர்கள் வியப்போடும் கேலியோடும் பேசிக்கொண்டனர். உற்சாகமாகவே பயணம் வன்னியை நோக்கி நகர்ந்தது.

விசாரிப்பு ஆரவாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க அவரவர் அமர்ந்திருந்த சீட்டுகளிலேயே சாய்ந்துகொண்டனர். வீட்டாருக்கு இரவிரவாக முழித்திருந்து பயணித்த களைப்பு என்றால் நிர்மலன் குடும்பத்துக்கு நெடுந்தூரப் பயணம் செய்த களைப்பு.

எல்லோரும் மெல்ல மெல்ல உறங்க, நிர்மலன் மட்டும் விழித்திருந்தான். வன்னியை அடைந்து அவர்களின் சொந்த ஊரான வட்டக்கச்சியை வாகனம் நெருங்கவும் பிரதான சந்தியை ஆவலுடன் எட்டிப் பார்த்தான். விழிகள் அங்கிருந்த மாற்றங்களை வியப்போடு வேகமாக உள்வாங்கத் தொடங்கிற்று! சந்தியை கடந்து இருபக்கமும் வயல்காணிகள் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்குள் வாகனம் நுழையவும் சுற்றுப்புறத்தை மறந்து வீதியை வெறித்தான்.

இதே வீதியில் எவ்வளவு வேகமாக சைக்கிளை மிதிப்பான். ஹாண்டிலை இறுக்கிப் பிடித்து முதுகை முன்னே சரித்து எதிர்காற்றுக்கு முகம் கொடுத்து அவன் மிதிக்கும் சைக்கிளுக்கு முன்னால் மோட்டார் வண்டியே தோற்றுவிடும். அவ்வளவு உத்வேகத்தை கொடுப்பது அவள் மீது அவன் கொண்ட ஆசை!

ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் கடல் திடீரென சுனாமியாக மாறி சுழற்றி அடிப்பது போன்று அவன் மனதுக்குள் பெரும் கொந்தளிப்புடன் பழைய நினைவுகள் வெளிவந்தன.

காலையில் எழுந்ததும் குளித்து, கண்ணாடி முன் நின்று தங்கையின் ஃபெயார் அண்ட் லவ்லியை அவளுக்கு தெரியாமல் முகத்தில் அப்பி, பௌடரால் திருநீறு பூசி, சாமியே கும்பிடாமல் சந்தனத்தை குழைத்து பெரிய பொட்டாக வைத்துக்கொண்டு  வேக வேகமாக அவன் போவது பள்ளிக்கூடத்துக்கு. படிக்கவல்ல! அவளை பார்க்க!

அவள் ஒன்றும் அவனுக்கு தெரியாதவள் அல்ல. ஒரே ஊர். ஒரே தெரு. சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் தான். பாடசாலையும் ஒன்றுதான். அவள் பெரியவள் ஆனதும் விழுந்த இடைவெளி மெல்ல மெல்ல நீண்டுகொண்டே போனதை இருவருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஒரு நாள் அவளைக் கண்டான்! புதிதாக.. புத்தம் புதுப் பூவாக! அவனுக்காகவே பிரம்மனால் பிரத்தியேகமாக  படைக்கப்பட்ட அவனவளாக!

ஏதோ ஒரு நொடியில் அந்த மந்திரக்கோல் சுழலுமே.. இனி இவள்தான் உனக்கு காலம் முழுக்க என்று மனம் சொல்லுமே.. அந்த நொடி.. ஒரு மழைநாளில் அவனுக்குள் நிகழ்ந்தது.

குடையை கொண்டுவர மறந்துவிட்டாள் போலும். வேக வேகமாக நடந்துகொண்டிருந்தாள். மழைக்கு நனைந்துவிடாமலிருக்க அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து தலையை சுற்றிப் போட்டிருந்தாள், முஸ்லிம் பெண்கள் அணிவது போல.

ரோட்டில் இருந்த சேற்றில் காலை வைத்துவிடாமலிருக்க, சேறில்லாத இடமாக பார்த்து காலை எட்டி எட்டி வைத்துக்கொண்டிருந்தவள், எதிரே சைக்கிள் வருவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அந்த நொடி.. சைக்கிளில் வந்துகொண்டிருந்த இவன் வீழ்ந்து போனான்! நிலத்திலல்ல! அவளின் ஆழ்கடல் போன்று விரிந்திருந்த அந்த மயக்கும் விழிகளுக்குள்!

தலையில் ஷால். நெற்றியில் பொட்டு. அவை இரண்டுக்குமான இடைவெளியில் அவள் கூந்தல் சுருள்கள் மழைத்துளிகளை தாங்கி நின்றன. கோயிலுக்கு போய் வந்திருப்பாள் போல, அவள் ஒட்டியிருந்த கறுப்பு பொட்டுக்கு மேலே சந்தனத்தையும் பட்டும் படாமல் குங்குமத்தையும் வைத்திருந்தாள். தலை சற்றே குனிந்து தரையை பார்த்திருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி இவன் சேற்றை அடித்துவிடுவானோ என்கிற அச்சத்துடன் அவள் பார்த்தது.. அந்த நிமிடத்தில் தான் அவன் தொலைந்தான்.

அவன் விரும்பித் தொலைந்த நொடி!

அதன் பிறகான நாட்கள் அந்த நொடியை சுற்றியே கடந்தது. ஒவ்வொரு நாட்களும் விடிவதே அவளை பார்ப்பதற்கு மட்டுமே என்றாகிப் போனது.

அந்த இடம் போற்றுதலுக்குரிய புனிதமாயிற்று!

இன்றோ அந்த இடத்தை கடந்தபோது வெறுப்பை உமிழ்ந்தன விழிகள்! அந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்வில் வராமலே இருந்திருக்கக் கூடாதா?

“அப்பா மானசிய பிடியுங்கோ.. ஆரனுக்கு பால் குடுக்க விடுறாள் இல்ல..” என்றபடி, மகளை தன்னிடம் நீட்டிய மனைவியின் குரலில் நினைவுகள் கலைந்து, மகளை வாங்கிக்கொண்டான்.

அதற்குள் அவர்களின் வீடும் வந்துவிட, இவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கவும் அயலவர் கூடவும் சரியாக இருந்தது. சந்தோசமாக அவர்களோடு ஐக்கியமாகிப் போனான் நிர்மலன்.

ஒரு கட்டத்துக்குமேல் அதுவும் முடியாமல் போனது. ஏதோ ஒன்று மனதை  அரித்துக்கொண்டே இருந்தது. ஆவலோடு ஊருக்கு வந்தாயிற்று! ஆசையோடு அம்மாவின் கையால் உணவும் வாங்கி சாப்பிட்டாயிற்று! சிறுவயதில் அப்பாவின் அடிக்கு பயந்து ஏறி ஒழிந்துகொண்ட மாமரத்தின் அடியில் பாய் விரித்து படுத்தும் எழுந்தாயிற்று! செவ்விளநீர் மரத்தில் பிடுங்கிய இளநீரையும் குடித்தாயிற்று! சொந்தபந்தங்களை கண்டு ஆசைதீர பழங்கதை பேசி சிரித்துமாயிற்று! ஆனாலும் ஏனோ மனம் கிடந்தது புளுங்கிக்கொண்டே இருந்தது. என்னதான் வேணுமாம்? ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு.

பழைய நினைவுகள் தான் வேண்டாம் வேண்டாம் என்றாலும் கேட்காமல் ஒன்றாக படையெடுத்து வந்து அவனை சராமாரியாக போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தன! அங்கிருந்த ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் அவனது இறந்தகாலத்தை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

அதுவும் அவன் வீட்டுக்கு முன்னால் பூத்துக் குலுங்கியபடி இப்போதும் நின்ற கொண்டல் மரம்.. பார்வை அங்கே விரைந்தது. ஒருகாலத்தில் அவனது தூதுப்புறா அதுதான்!

‘ஊப்ஸ்..’ காற்றை ஊதி நினைவுகளை விரட்ட முயன்றான். முடியவில்லை!

முதல் காதல். வாழ்வின் அழியா சித்திரம் தான் போலும். இன்றும் ரணமாக் கிடந்து கொதித்தது.

அதன் பிறகோ அவன் பார்வை அவள் மீது ஆர்வமாக படியத் தொடங்கிற்று! முதலில் அவள் உணரவேயில்லை. உணரத்தொடங்கியதும் சில நாட்கள் படபடப்போடு அவனிருந்த திசைக்கே வரவில்லை. தவிர்க்கமுடியாமல் சந்திக்க நேர்ந்தால் தயக்கத்துடன் தலையை குனிந்துகொண்டு ஓடிவிடுவாள். அவளின் தயக்கம் தான் அவனுக்கும் துணிச்சலைக் கொடுத்தது! அந்தத் துணிச்சலோடு அவளை வேண்டுமென்றே பார்ப்பான்!

அவளும் பிறகு பிறகு தோழியர் அறியாமல், அவனும் அறியாமல் அவனை கண்களால் ரசிக்கத் தொடங்கினாள். அதைக் கண்டுகொண்டதும் இவன் பட்ட பாடு என்ன, குதித்த குதி என்ன!

அந்த நாட்கள், அவனைப் பார்த்து இன்று எள்ளி நகையாடியது !

‘ச்சே! எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ அந்த நினைவுகளே கசந்து வழிந்தது!

அதுவரை அவன் விழிகளையே சந்திக்காதவள் அதன் பிறகோ மெல்ல தன் விழிகளை அவன் விழிகளோடு கலக்க முனைவாள். முடியாமல் தடுமாறித் தவித்து, சட்டென பார்வையை விலக்கிவிடுவாள். இமைகள் படபடக்க, கன்னங்கள் மெல்லச் சிவக்கும். இதழோரத்தில் சின்னப் புன்னகை ரகசியமாய் மலரும். அதெல்லாம் அவளிடமிருந்து கிடைத்த பச்சைக்கொடி.

அவனது ஒற்றை பார்வையையே தாங்கமுடியாமல் தடுமாறுகிறவளின் தவிப்பை அவன் ரசிப்பான். தான் படும்பாட்டை அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து வெட்கத்தில் அவள் துடிப்பாள். விழிகள் அலைபாயும்!

அதுவே அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது என்று உணர்த்திய ஜாடைகள்.

ஒவ்வொரு வெள்ளியும் அவள் கோவில் செல்வாள் என்பதையறிந்து அவனும் செல்வான். அன்று தன் கையிலிருந்த மிகுதி திருநீறு சந்தனம் குங்குமத்தை அவன் தூண் ஒன்றில் கொட்டியபோது அவள் எடுத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அப்பட்டமாக அவனுக்கு மட்டுமே அவள் தெரிவித்த பதிலது!

எல்லோராலும் ‘நான் உன்னை காதிலிக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாயா?’ என்று கேட்டுவிட முடியாது. ‘ஆமாம் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லிவிடவும் முடியாது.

இவைதான் கேள்விகளும் பதில்களும்!

அன்று உலகத்தையே கைக்குள் அடக்கிவிட்ட இறுமாப்பு அவனிடம்! எத்தனையோ சாம்ராஜ்யங்களை வென்ற சோழன் கூட அந்த துள்ளல் துள்ளியிருக்க மாட்டான்! அப்படியிருந்தது அவள் மனதை வென்றுவிட்ட போதை!

அதன் பிறகு இதழ்கள் பேசாத அத்தனை காதலையும் விழிகள் நான்கும் பேசிக்கொண்டன! நெடு நாட்களுக்கு விழிகளுக்கு இருந்த தைரியம் இதழ்களுக்கு வரவேயில்லை.

இரண்டாயிரத்து எட்டாம் வருடம் நாட்டுப்பிரச்சனை மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணர்ந்து, வீட்டில் அவனை சுவிசுக்கு அனுப்ப பெற்றவர்கள் தயாரானபோது, அவளைப் பிரியப்போகிறோம் என்கிற துயர் கொடுத்த துணிச்சலில்தான் அவளிடம் முதன் முதலாக அவன் கதைத்ததே!

ஒருநாள் மாலை அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்ற கொண்டல் மரத்தில் அவள் பார்க்கும் வகையில் ஒரு துண்டை செருகிவிட்டு சென்றான் நிர்மலன். யாரும் பார்க்காத நேரம் பார்த்து அதை எடுத்துப் படித்தாள் அவள். அதில் எழுதியிருந்ததன் படி கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது மெல்லிய இருள் கவியத் தொடங்கியிருந்தது.  

படபடப்பும் பயமுமாக அவனருகில் வந்து நின்றவளிடம், “சுவிசுக்கு போகப்போறன்..” என்று அவன் சொன்னதும், அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டிற்று!

அந்தக் கண்ணீரை கண்டபோது எந்தளவு தூரத்துக்கு வலித்ததோ அந்தளவு தூரத்துக்கு நெஞ்சு நிறைந்து போனது. காதலியின் கடைக்கண் பார்வைக்கே தவமாய் தவமிருந்தவன் அவன். அந்தக் கண்களில் இருந்து கண்ணீர் அவனுக்காக வழிந்தால்?

நெஞ்சில் நிறைந்திருந்த நேசம் உந்த சட்டென்று அவளின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் துடைத்துவிட்டான்.

“நீ இப்படி அழுதா நான் எப்படி போறது..?”

“நீங்க இல்லாம எப்படி.. நான் தனியா..” சிவந்திருந்த விழிகள் மீண்டும் கலங்க அவன் முகம் பார்த்து ஏக்கத்தோடு அவள் கேட்டபோது, காலம் காலமாய் காதலோடு வாழ்ந்துவிட்ட திருப்தியை அனுபவித்திருந்தான் நிர்மலன்.

ஒவ்வொரு நாட்களையும் வாழ்கிறோம் தான். ஆனால், சில நாட்கள் தான் நம் வாழ்க்கையாகிப் போகிறது. அந்த நாட்களில் தான் மொத்த வாழ்க்கையையுமே வாழ்ந்திருப்போம். அப்படித்தான் அவனும்! அன்றுதான் வாழ்ந்தான். அந்த நாள் தான் அவனது மிகுதி வாழ்க்கையாகவும் மாறிப்போனது!

“ஏன் தனியா.. போகேக்க எப்படியாவது ஒரு செல் வாங்கி தந்திட்டு போறன்.. ஒவ்வொரு நாளும் எடுப்பன். ஸ்கைப்ள கதைக்கலாம். சரியா..?” இதமாக சொன்னான்.

அவள் தெளியாத முகத்தோடு தலையசைக்க, “இவ்வளவு நாளும் கண்ணால பாத்துகொண்டு மட்டும் தானே இருந்தோம். இனி கதைக்கப் போறோமே. அத நினச்சுப்பார்.” என்றான் குறும்புச் சிரிப்போடு.

அப்போதுதான் அதுநாள் வரை அவர்களை தடுத்து நிறுத்தியிருந்த வெட்கத்தையும் கூச்சத்தையும் தடுமாற்றத்தையும் உடைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்பதே புலப்பட, வெட்கத்தோடு புன்னகைத்தாள் அவள். அவன் சொன்ன சேதி நெஞ்சை அழுத்திய பாரத்தில் அதை உணரத் தவறியிருந்தாள்.

“இப்போதைக்கு நல்லா படி.. எனக்கு அங்க விசா கிடைச்சதும் முதல் வேலையா உன்ன கூப்பிட்டுடுவன்.. அதால கவலைப்படாம இரு என்ன..!” என்றான் கனிவோடு.

சம்மதமாக தலையசைத்தாள். விழிகளில் கலக்கம் சூழ, நிமிர்ந்து அவனையே பார்த்து, “என்னை மறந்திட மாட்டீங்க தானே..” கேட்கையிலேயே கேவல் வெடித்தது. “பிறகு.. பிறகு நான் செத்திடுவன்..” என்றாள். துடித்துப்போனான் நிர்மலன்.

இன்று நெஞ்சு கொதித்தது அவனுக்கு. எப்படியெல்லாம் எமாந்திருக்கிறான். எவ்வளவு பெரிய பச்சோந்தி அவள்!

‘அவனை இளிச்சவாயனாக மாற்றியவள் மீது ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிற்று!’

இன்று காதலின் வலி அவனிடம் இல்லைதான். மருந்தாக வந்து மனக்காயத்தை ஆற்றியவள் அவன் மனைவி! அவனது காதலும் நேசமும் பாசமும் அவளிடம் மட்டும்தான்.

ஆனால், ஒரு ஏமாற்றுக்காரியை நம்பினேனே.. அவளிடம் ஏமாந்து போனேனே என்பதுதான் இன்னும் நெஞ்சில் நின்றது.

அன்று சற்றும் உணரவில்லையே! மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவளிடம் மயங்கிக் கிடந்தானே! அந்தளவுக்கு சிறந்த நடிகை அவளா? அல்லது மிகக் கேவலமான ஏமாளி அவனா?

ஆத்திரமும் ஆவேசமும் தான் வந்தது.

ஆனால் அன்றோ.. அவர்களின் காதல் செல்பேசி வழியாக ஆத்மார்த்தமாக வளர்ந்துகொண்டே இருந்தது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தான்.

வருடம் இரண்டாயிரத்து ஒன்பது! உலகத் தமிழர்களையே உலுக்கிப்போட்ட கோர வரலாறு நடந்த வருடமது! உயிர்களும், உடல்களும், அற்புத காதல்களும், உயிரினும் மேலான பெண்களின் கற்புகளும் கயவர்களால் களவாடப்பட்ட வருடம்!

இன்னும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் ஆறாத வடுவை ஆழமாக பதித்துவிட்ட வருடமது!

உள்நாட்டு யுத்தம் உச்சத்தை தொட்டதில், இடம்பெயர்வில் ஆளாளுக்கு தொலைந்து போனதில் அவளின் இருப்பு எங்கே என்று தெரியாது அவன் துடித்துப்போனான்.

உயிரோடு இருக்கிறாளா..?  இருந்தாலும் நலமாக இருக்கிறாளா..? என் கண்மணி என்னென்ன துயர்களை அனுபவிக்கிறாளோ..! துணைக்கு நான் இல்லாமல் போனேனே..! நான் இங்கே பாதுகாப்பாக இருக்க அவள் அங்கே என்ன பாடு படுகிறாளோ..! கடவுளே எல்லோரையும் காப்பாற்று..! அவளையும் பாதுகாத்துக்கொள்! என்று அவன் மனமும் உதடுகளும் இடைவிடாது உச்சரித்தபடியே இருந்தன.

உறக்கம் உணவில்லாது பைத்தியகாரனாகவே மாறிப்போனான்.

ஒருவழியாக, நடந்த கோரங்கள் எல்லாம் முற்றுக்கு வந்து வீட்டினரின் தொடர்பு கிடைத்ததும், அவள் எப்படி இருக்கிறாள் என்று எடுத்ததுமே கேட்கத் துடித்த நாவை அவன் அடக்கப் பட்ட பாடு.. பெற்றவர்களை விசாரித்து, சொந்தங்களை விசாரித்து, பிறகு ஊராரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று  சுற்றிவளைத்து அவளை கேட்டபோது, ‘உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது’ என்றதும் தாயிடம் தன்னை மறந்து கத்திவிட்டு வைத்துவிட்டான்.

அவனின் அவள் எப்படி அவனை விட்டுவிட்டுப் போவாள்? இங்கே அவன் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதானே இருக்கிறது.

இருக்காது! கடைசிவந்தாலும் இருக்காது. அவள் உயிரோடு நன்றாக இருப்பாள். என்னை தொடர்பு கொள்வாள் என்று மனம் அழுத்தி சொன்னது.

அடுத்த நிமிடமோ அவன் செவிகளை வந்தடைந்த செய்திகள் ஒவ்வொன்றுமே அவன் குலையை நடுங்க வைத்தன.

மனம் நடுங்க, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக தேடித்தேடி அழைத்து, அவளை பாத்தீங்களாடா? என்று கேட்டபோது, யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. வீட்டிலோ பெண் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

அவனது முயற்சி மட்டும் ஓயவேயில்லை. நீண்டநாள் தவத்துக்கு கிடைத்த பலன்போல் நண்பன் ஒருவன் வவுனியா அகதிகள் முகாமில் அவளைக் கண்டேன் என்று சொன்னபோது அழுதே விட்டான் நிர்மலன்.

போதும்! இது போதும்! இனி எப்படியும் அவளை தேடிக் கண்டு பிடித்துவிடுவேன். அவளிடம் எப்படியடி இருக்கிறாய்.. என்ன கஷ்டம் எல்லாம் பட்டாய் என்று கேட்டு அவள் பட்ட துயர்களையும் துன்பங்களையும் நான் வாங்கிக்கொண்டிட வேண்டும்!

நெஞ்சம் உந்த, நண்பனிடம் வவுனியாவில் போய் அவளைப் பார்க்கச் சொல்ல, அவனோ தன் மனைவி வயிற்றில் குழந்தையோடு ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள் என்று சொல்ல, இவனின் தவிப்பையும் உணர்ந்து அவன் அவனது நண்பன் ஒருவனை வவுனியாவுக்கு அனுப்பினான். அங்கே அவன் முகாமில் யார் யாரையோ பிடித்து, தன் செல்பேசியை அவர்களின் மூலம் அவளிடம் கொடுத்துவிட்டு இவனுக்குச் சொல்லி, அந்த நம்பருக்கு இவன் அழைத்த அந்த நிமிடம்.. அவளின் குரலை கேட்டுவிட அவனது ஆவி முதற்கொண்டு அந்தம் அத்தனையும் தவியாய் தவித்துப்போனது.

“ஹலோ..” மெலிந்து நலிந்து கேட்ட குரலில், எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டுவிடத் துடித்தவனின் அத்தனை துடிப்பும் அடங்க, அவளின் குரலை உள்வாங்கி தன் உயிருக்குள் நிரப்பிக்கொண்டான்.

முன் நெற்றிக் கேசத்தை அப்படியே ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு காதில் செல்லை பொருத்தியபடி அப்படியே சோபாவில் கண்களை மூடி சாய்ந்துவிட்டான் நிர்மலன்.

“ஹ..லோ.. நிர்..ம..லன்..” உடைந்து கேட்ட குரலில் அவனும் உள்ளுக்குள் உடைந்துபோனான்.

“ம்ம்..”

“நிர்மலன், எனக்கு.. எனக்கு கல்யாணம் முடிஞ்சுது. அதால இனி எனக்கு எடுக்காதீங்கோ. நான் சந்தோசமா வாழுறன். திரும்பத் திரும்ப எடுத்து அதை கெடுத்துப்போடாதீங்கோ..” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமலே கைபேசியை அணைத்திருந்தாள்.

துடித்துப்போனான் நிர்மலன்.

அவள் தன் கஷ்டத்தை சொல்வாள்.. கண்ணீர் விட்டழுவாள்.. என்ன எப்ப கூப்பிடப் போறீங்க என்று கேட்பாள்..  நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிடக் கூடாது. அவளை தேற்ற வேண்டும்.. தைரியம் கொடுக்கவேண்டும் என்று எத்தனையோ நினைத்து வைத்தவன் சத்தியமாக இதை நினைக்கவே இல்லை.

அவனுடைய வாழ்க்கையே அவள்தான் என்று அவனிருக்க, அவள் தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டதும் அல்லாமல், அவளது சந்தோசத்தை கெடுக்க வேண்டாமாமா?

அவள் சொன்னதை நம்பவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திரும்பவும் பைத்தியமாகிப்போனான் அவன். வாழ்க்கையே கசந்தது. யாரையும் நம்பப் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அது ஆக்ரோஷத்தை கொடுத்தது.

‘எனக்கு கல்யாணம் முடிஞ்சுது.. நான் சந்தோசமா வாழுறன்.. அதை கெடுத்துப்போடாதீங்கோ..’ இந்த வார்த்தைகளே அவனை சாகவும் வைத்தது. வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற வேகத்தையும் கொடுத்தது.

தாயின் விடாத தொல்லையும் சேர்ந்துகொள்ள திருமணத்துக்கு சம்மதித்தான். உஷா, அவன் வாழ்வின் பொற்காலம் தான். அவளின் அன்பு மெல்ல மெல்ல அவனை முற்றிலுமாக மீட்டுக்கொண்டு வந்தது. ஆனாலும், உள்ளே ஒரு வெறி.. அவள் முன்னால் போய் நிற்கவேண்டும். நான் சந்தோசமாக வாழும் வாழ்க்கையை பார் என்று காட்ட வேண்டும்! நீயில்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்று முகத்தில் அறைந்தார் போல் அவளை உணரவைக்க வேண்டும்!

இன்றும் நெஞ்சு கொதித்தது, அவளிடம் ஏமாந்ததை எண்ணி. வீதியால் செல்கையில் அவள் வீட்டை பார்த்தான். பாழடைந்து, பழுதடைந்து கோரமாய் காட்சி அழித்தது.

‘அவளும் இப்படித்தான் இப்போது இருப்பாள்!’

அன்று எல்லோருமாக பக்கத்து ஊர் கோவிலுக்குச் சென்றார்கள். அவன் அம்மாதான் ஏதோ வேண்டுதல் என்று அழைத்துச் சென்றார்.

காரிலிருந்து இறங்கியதுமே அவன் செல்வங்கள் அங்குமிங்கும் ஓடத்தொடங்கினர். உஷா பூஜை பொருட்களை கையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளை அடக்க முடியாமல் சிரமப்பட, “நீ போ.. பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நான் வாறன்..” என்று மனைவியை பெற்றவர்களுடன் அனுப்பினான்.

ஒருவழியாக அவர்களை சமாளித்து கூட்டிக்கொண்டு கோவிலுக்கு அவன் சென்றபோது, சக்கர நாற்காலியில் இருந்த ஒரு பெண்ணின் தலையை கண்ணீரோடு அம்மா தடவுவது தெரிந்தது. அந்தப் பெண்ணின்  பக்கத் தோற்றம்  தான் தெரிந்தது.

யார் என்கிற கேள்வி எழுந்தாலும் அவனுக்கும் மனம் பாரமாகிப் போயிற்று. ஒரு காலில்லை என்று பார்க்கவே தெரிந்தது. அங்கவீனர்கள் வேண்டுமென்றே உற்பத்தி செய்யப்பட்ட தேசமல்லவா நம் தேசம்!

நெஞ்சு கனக்க அவன் பிள்ளைகளோடு அவர்களை நெருங்க, அவ்வளவு நேரமும் அவனது தாயோடு கதைத்துக் கொண்டிருந்தவள் முகத்தை திருப்பி இவன் மனைவியை பார்த்து புன்னகைத்தாள்.

அப்போதுதான் முகம் தெரிந்தது! தெரிந்த கணத்தில் அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் நிர்மலன்.

இது.. அவளல்லவா!

‘எனக்கு கல்யாணம் முடிஞ்சுது. நான் சந்தோசமா இருக்கிறன்.. அதை கெடுத்துப்போடாதீங்கோ..’ நெஞ்சில் அறைந்தது அந்த வார்த்தைகள். இதுதானா அவள் சொன்ன சந்தோசம்?

நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. எத்தனை ஆத்திரம்? எவ்வளவு ஆவேசம்? எவ்வளவு கோபம்.. கடவுளே..

திரும்பியே வரமுடியாத பாதையில் பயணித்துவிட்டானே!

கால்கள் நகர மறுத்தன! கண்கள் அவளைவிட்டு அகல மறுத்தன! இதயத்தை மட்டும் தனியே இழுத்தெடுத்து யாரோ கசக்கி பிழியும் வலி!

கட்டாயம் அவன் சுவிசுக்கு திரும்பத்தான் போகிறான். தன் வாழ்க்கையை பார்க்கத்தான் போகிறான். குழந்தைகளோடு சந்தோசமாக இருக்கத்தான் போகிறான். மனைவியோடு வாழத்தான் போகிறான். ஆனாலும், இனி என்றைக்குமே இறக்க முடியாத பாரம் நெஞ்சை அழுத்தப் போகிறது. கட்டையோடு கட்டையாக போனால் மட்டுமே அது காணாமல் போகும் போலும்! அதுகூட உறுதியில்லை!

அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே தாயிடம் ஓடிய குழந்தைகளை தன் நெஞ்சோடு அரவணைத்து கொஞ்சினாள் அவள். கண்களில் அத்தனை கனிவு! முகத்திலோ சாந்தம்! அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனால் தான் அவளை எதிர்கொள்ள இயலவில்லை.

பார் பார் என்று தன் சந்தோசத்தை காட்ட வந்தவன் அவளை பார்க்க முடியாமல் நின்றான். வாய் திறந்து கதைக்கக்கூட இயலாமல் எல்லோரையும் இழுத்துக்கொண்டு திரும்பினான்.

“இங்க ஏனம்மா தனிய இருந்து கஷ்டப்படுறாய். அங்க.. எங்கட ஊருக்கே வாவன். நாங்க எல்லோரும் இருக்கிறோம் தானே..” என்றார் அவனது அன்னை.

அதற்கு எதுவுமே சொல்லாத அவளின் கண்கள் அவனிடம் சொன்னது,

காலங்கள் கடந்தாலென்ன

கனவுகள் சிதைந்தாலென்ன

பாதைகள் மாறினாலென்ன

உன்மேல் நான் கொண்ட

உயிர் நேசம் சொல்கிறது

நெஞ்சே.. நீ வாழ்க!